சென்னை: அனுப்பம்பட்டு - மீஞ்சூர் இடையே மீஞ்சூர் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி (கப்லிங்) உடைந்து இன்ஜின், பெட்டிகள் தனியே கழன்றது. இதனால், கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் இரண்டரை மணி நேரம் விரைவு, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியில் இருந்து தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் பேரளத்துக்கு 42 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பெட்டிகளில் நெல் ஏற்றப்பட்டிருந்தது. இந்த ரயில் நேற்று பிற்பகலில் அனுப்பம்பட்டு ரயில் நிலையத்துக்கும் மீஞ்சூர் ரயில் நிலையத்துக்கும் இடையே சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு இடையே இருக்கும் இணைப்பு கொக்கி (கப்லிங்) உடைந்து, இன்ஜினுடன் ஒரு பெட்டி கழன்றுவிட்டது.