மிளகின் பயன்கள்!

1 month ago 4

நன்றி குங்குமம் டாக்டர்

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது மருத்துவ மொழி. பைப்பர் நிக்ரம் என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட மிளகு படர்ந்து பூத்துக் காய்க்கும் கொடி இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். சாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும் பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது. பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கருமிளகு என சில வகைகளும் உண்டு.

உணவுப் பயன்பாட்டில் மிளகாய் வருவதற்கு முன், நம் நாட்டில் காரச்சுவைக்கு மிளகைப் பயன்படுத்தி வந்தார்கள். நம் முன்னோர்கள். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல் திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.அஞ்சறைப் பெட்டிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் மிளகானது ரசம், புளிக்குழம்பு உள்ளிட்ட சைவ உணவுகளிலும், பல அசைவ உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. இது வெறும் உணவில் சுவை சேர்ப்பதோடு நின்று விடாமல் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாக உள்ளது.

மிளகில் விஷத்தை முறிக்கக்கூடிய தன்மை உள்ளது. இதில் கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன. இதன் நன்மைகளைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சமையலுக்கு மட்டுமல்லாது. மருத்துவத்திலும் இதன் பயன்பாடு எண்ணில் அடங்காதவையாக இருக்கின்றது. மிளகின் நற்குணங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்களும், பிற நாட்டவர்களும் அதிக அளவு நம் நாட்டில் இருந்து மிளகை தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யத் தொடங்கினர். இன்று நம் தமிழ்நாட்டு உணவில் மட்டுமல்லாது உலகில் பெரும்பாலும் சமைக்கக்கூடிய அனைத்து உணவுகளிலும் இன்று மிளகு பயன்படுத்தப்படுகின்றது.

மிளகு சமையலுக்கு நல்ல மணத்தையும் சுவையையும் தருகின்றது. மிளகில் பல நற்பலன்கள் நிறைந்துள்ளது.மிளகு ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பிற செரிமானச் சாறுகள் அதிக அளவு சுரக்க உதவுகின்றது. இவை உணவுப் பொருட்களை உடைத்து, எளிதாக ஜீரணமாக உதவுகின்றது. மேலும் இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. இது மட்டுமல்லாது மிளகு வயிற்றில் இருக்கும் வாய்வு பிரச்னைகளையும் போக்க உதவுகிறது.

கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த மிளகு பெரிதும் உதவுகின்றது. மிளகை நெய்யுடன் சேர்த்து உணவில் எடுத்து வந்தால், கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மிளகுத் தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.

தொகுப்பு: தவநிதி

The post மிளகின் பயன்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article