மியான்மர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 704 ஆக உயர்வு

2 days ago 3

பாங்காக்,

மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே நகரருகே நேற்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.

இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்று சிறப்பு மிக்க துறவிகளுக்கான மடாலயம் கூட இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளை சந்தித்துள்ளன. மியான்மரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 704 பேர் பலியாகி உள்ளனர். 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கையும், காயங்களின் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மியான்மர் ராணுவம் தலைமையிலான அரசின் மூத்த ஜெனரல் மின் ஆங் லாயிங் தொலைக்காட்சியில் தோன்றி பேசும்போது கூறினார்.

இதனை தொடர்ந்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை அரசு பிறப்பித்து உள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுடன் ரத்த நன்கொடைக்கான தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. நிவாரண பணிகளுக்கு ஐ.நா. அமைப்பு 50 லட்சம் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சையளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவசரகால சிகிச்சை துறையும் தயாரான நிலையில் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் நடந்து வருகின்றன. அணை ஒன்றும் உடைந்து உள்ளது. இதனால், நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளுக்குள் நீர் புகும் ஆபத்தும் ஏற்பட்டு உள்ளது.

பலி எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்க கூடும் என அமெரிக்க நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

உள்நாட்டு போரால் மியான்மர் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில், தகவல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. இணையதள சேவையும் நிறுத்தப்பட்டது, சேத விவரங்கள் வெளிவருவதில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்நாட்டு போரால் 30 லட்சம் பேர் புலம் பெயர்ந்து உள்ளனர். 2 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.

தாய்லாந்தில் நேற்று 10 பேர் பலி என அறிவித்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை திருத்தி வெளியிடப்பட்டு உள்ளது. 6 பேர் பலி என்றும் 22 பேர் காயம் என்றும் தெரிவித்து உள்ளது. காயமடைந்தவர்கள் தவறுதலாக பலி எண்ணிக்கையில் நேற்று சேர்க்கப்பட்டு விட்டனர் என்று பாங்காங் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாங்காக்கில் 1.7 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களில் பலர் உயரடுக்குகளை கொண்ட கட்டிடங்களில் குடியிருந்து வருகின்றனர். 3 கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததில், 101 பேர் காணாமல் போயுள்ளனர். இன்று காலையும் மீட்பு பணி தொடருகிறது.

Read Entire Article