மின்வேலியில் சிக்கி விவசாயி பலி சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவானவருக்கு வலை செங்கம் அருகே காட்டுப்பன்றிக்கு அமைத்த

1 month ago 8

செங்கம், அக்.2: செங்கம் அருகே காட்டுப்பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். அவரது சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பீமானந்தல் நெடுங்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(45), விவசாயி. இவர், சின்ன கோலாபாடி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் பன்னீர்செல்வம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். தற்போது நிலக்கடலை அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளதால் வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிரை சேதப்படுத்தக்கூடாது என்பதற்காக மணிலா பயிரை சுற்றிலும் மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பக்கத்து நிலத்தை சேர்ந்த ராமசாமி(55), என்பவர் நேற்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் பிற்பகல் வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த நிலையில் அவரது மனைவி காமாட்சி மற்றும் உறவினர்கள் வயல்வெளியில் தேடிச் சென்றபோது எங்கும் கிடைக்கவில்லை. அப்போது அருகில் உள்ள கிணற்றில் ராமசாமி சடலமாக மிதப்பது கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது சடலத்தை மீட்டபோது, உடலில் மின்சாரம் பாய்ந்து கருகிய காயங்கள் இருந்தது. இதற்கிடையில் அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ராஜா திடீரென தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்ட ராஜா அமைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ராமசாமி கிணற்றில் தவறி விழுந்தது போல் இருக்க சடலத்தை வீசியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜாவை தேடி வருகின்றனர். இறந்த ராமசாமிக்கு மனைவி மற்றும் மகள்கள் உள்ளனர். மின்வேலியில் சிக்கி பலியான விவசாயி சடலம் கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

The post மின்வேலியில் சிக்கி விவசாயி பலி சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவானவருக்கு வலை செங்கம் அருகே காட்டுப்பன்றிக்கு அமைத்த appeared first on Dinakaran.

Read Entire Article