பொன்னேரி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய கேள்வி, பதில் நேரத்தில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர், பொன்னேரி அருகே மாதவரம் ஊராட்சியில் 100 கி.வோ. திறன் கொண்ட மின்மாற்றி அமைத்து சீரான மின் விநியோகம் செய்திட நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்னேரி தொகுதியில் 11 மின்மாற்றிகள் நிறுவ திட்டமிடப்பட்டு, ஏற்கனவே 3 மின்மாற்றிகள் நிறுவப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு, 8 மின்மாற்றிகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது. முஸ்லீம் நகரில் ஏற்கனவே 100 கே.வி மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில் கூடுதலாக தேவையெனில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, மீஞ்சூர் பேரூராட்சியில் 18,000 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் மின் பற்றாக்குறையும், மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. மீஞ்சூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது என எம்எல்ஏ கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதித்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களை நிரப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினரின் தேவையான கோரிக்கைகள் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.
The post மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதித்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது: பேரவையில் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.