சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை; TDS பிடித்தம் தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு நடக்கிறது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது, இங்குள்ள பசுமை எரிசக்தி பிரிவில் இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். டிடிஎஸ் வரிப்பிடித்தம் செய்ததில் குளறுபடி நடந்ததாக வந்த புகாரையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொள்வதாகத் தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் இன்று (25.02.2025) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான செலவினங்களில் உரிய வருமான வரி பிடித்தம் (TDS) தொடர்பாக வழக்கமான சரிபார்ப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை ஆகும். ஆகவே தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் எவ்வித வருமான வரி சோதனையும் நடைபெறவில்லை. வருமான வரி சோதனை என்ற செய்தி தவறானது. என தகவல் தெரிவிக்கப்பட்டது.
The post மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை: மின்வாரியம் விளக்கம் appeared first on Dinakaran.