ஈரோடு,
ஈரோடு திண்டல் திருமலை கார்டன் வித்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை. இவருடைய மகன் கவின்குமார் (வயது 25). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அம்மாபேட்டையை அடுத்த ஜர்த்தல் அருகே வசித்து வந்த அவருடைய தாத்தா இறந்துவிட்டார். அதன் 3-ம் நாள் துக்க நிகழ்வுக்காக கவின்குமார் தனது தந்தை, தாய், அக்கா ஆகியோருடன் ஜர்த்தலில் உள்ள தாத்தா வீட்டுக்கு நேற்று முன்தினம் காரில் சென்று உள்ளார்.
பின்னர் அங்குள்ள காட்டுக்கொட்டாய் என்ற இடம் அருகே காரை நிறுத்திவிட்டு அனைவரும் துக்க வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் நடந்து சென்று கொண்டிருந்த கவின்குமாரை திடீரென மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட கவின்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.