மாவட்டம் முழுவதும் களைகட்டியது பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, மஞ்சள் விற்பனை ஜோர்

2 hours ago 3

சிவகங்கை : பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு,மஞ்சள் விற்பனை செய்யப்பட்டு ஜோராக நடைபெற்று வருகிறது. ஒரு கட்டு கரும்பு ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தோன்றிய இப்பண்டிகையில் கரும்பு, மஞ்சள் கொத்து, பச்சரிசி, பாசிப்பருப்பு, சர்க்கரை வள்ளி கிழங்கு என விவசாயம் சாந்த பொருட்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யும் வகையில் சிவகங்கை அருகே சாலூர், மலம்பட்டி, சிவல்பட்டி, சானிப்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கரும்புகள், மஞ்சள் கொத்து விளைவிக்கப்படுகிறது.

பல்வேறு வகையான வெல்லம் தயாரிப்பது, பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட தேவைகளுக்கே செங்கரும்புகள் பயன்படும். தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் அடுத்த பொங்கலுக்கான கரும்பு நடவு தொடங்கி விடுகிறது. 10 மாதங்களில் முழுமையாக வளர்ந்து கரும்புகள் அறுவடைக்கு தயாராகின்றன.தற்போது அரசு சார்பில் செங்கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு ரேசன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இதனால் செங்கரும்பு விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இதுபோல் பொங்கல் பண்டிகையின் போது கட்டப்படும் மஞ்சள் கொத்துகளும் இப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் கரும்பு, மஞ்சள் கொத்து, தோரணங்கள் கட்ட பயன்படுத்தப்படும் மாவிலை, கண்ணுப்பீளை, ஆவரம்பூ, அருகம்புல் உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.நாளை வீட்டுப் பொங்கல், நாளை மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி நேற்று முதல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் சந்தைகள், மக்கள் கூடும் இடங்களில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

விவசாயிகள் கூறியதாவது, ‘மாவட்டத்தில் சிவகங்கை தாலுகாவில் உள்ள இப்பகுதியில் உள்ள கிராமங்களில் மட்டுமே செங்கரும்பு விளைவிக்கப்படுகிறது. பிற பகுதிகளில் ஆலைக்கரும்புகளே பயிரிடுகின்றனர். உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளதால் கூடுதல் விலைக்கு விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். குறிப்பிட்ட அளவிலான கரும்புகளை அரசு கொள்முதல் செய்தது. மற்றவற்றை வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம் என்றனர்.

வியாபாரிகள் கூறியதாவது:ஒரு வண்டி கரும்பு(300கரும்புகள்) ரூ.5ஆயிரத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை கொடுத்து வாங்கி வாகன செலவு உள்ளிட்ட மற்ற அனைத்து செலவுகளையும் சேர்த்து ரூ.8ஆயிரத்திற்கு விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். இதனால் ஒரு கட்டு கரும்பு ரூ.400 வரை விலை வைத்து விற்பனை செய்கிறோம். ஆனால் தற்போது கட்டாக கரும்பு வாங்குவது குறைந்து விட்டது. ஒன்றிரண்டு கரும்புகள் மட்டுமே கேட்கின்றனர். இரண்டு நாட்களில் விற்பனையாகாத கரும்புகளை குறைந்த விலைக்கே விற்க வேண்டிய நிலை வரும் என்றனர்.

பனங்கிழங்கு கட்டு ₹250

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன. பனை ஓலை முதல் மரத்தின் வேர் பகுதி வரை பயனுள்ளதாக இருப்பது பனை மரத்தின் தனிச்சிறப்பு. இதனால் பூலோகத்தின் கற்பக தரு என அழைக்கப்படுகிறது. கருப்பட்டி, கற்கண்டு, பனை ஓலை, நார் பொருட்கள் உள்ளிட்ட பனை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியசெலவணியை ஈட்டி தருகிறது.

இந்நிலையில் பனையின் முக்கிய உணவு பொருளான பனங்கிழங்கு சீசனில் உணவுபொருள் என்பதாலும், தைபொங்கல் விழா என்பதாலும் கரும்புக்கு அடுத்து முக்கிய இடத்தில் உள்ளது. விழாவில் கரும்புக்கு அடுத்தப்படியாக இருப்பது பனங்கிழங்கு ஆகும். ராமாநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், திருப்புல்லாணி, கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்றியங்களில் பனைமரங்கள் அதிக அளவில் உள்ளன.

இப்பகுதியில் கடந்த மே மாதம் சீசன் முடிந்து பனங்காய் சீசன் துவங்கியது. தொடர்ந்து ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் பனம் பழமாகி வந்தது. பழத்தை சேகரித்த பனை விவசாயிகள், தொழிலாளர்கள் உலர வைத்து, பனங்கிழங்கு பயன்பாட்டிற்காக கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் மண்ணில் புதைத்து வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் செம்மண் நிலங்களில் அதிகமாக பனைமரங்கள் இருப்பதால் செம்மண்ணில் புதைத்து வைத்து அதிகமாக தண்ணீர் ஊற்றி நல்லமுறையில் வளர்த்து வந்தனர்.

கிழங்கு நன்றாக வளர்ந்து தற்போது அறுவடை நிலையை எட்டியுள்ளதால் மண்ணில் இருந்து வெளியே எடுத்து சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15 நாட்களாக மாவட்டத்தில் பனங்கிழங்கு சீசன் சூடிபிடித்துள்ளது.மாவட்டத்தில் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை, பெரியபட்டிணம், ரெகுநாதபுரம், முத்துப்பேட்டை, காரான், பெருங்குளம், தெற்கு கரையூர், சாயல்குடி அருகே நரிப்பையூர், கடுகுசந்தைசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விளைவிக்கப்படுவதால் 100 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் 300 வரை வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது.

இதனை மதுரை,விருதுநகர்,புதுக்கோட்டை,திருச்சி மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்கின்றனர். இதுபோன்று உள்மாவட்ட வியாபாரிகள், வாரச்சந்தை வியாபாரிகள், நடை பாதைக்கடை, தலைசுமை சில்லரை வியாபாரிகளும் வாங்கி சென்று விற்று வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி போன்ற பகுதிகளில் உள்ள சந்தைகள், கடை வீதிகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

The post மாவட்டம் முழுவதும் களைகட்டியது பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, மஞ்சள் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Read Entire Article