ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
நீலகிரி மாவட்டத்தில் ஜூன் துவங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். இந்நிலையில், நடப்பாண்டில் கடந்த ஜனவரி துவங்கி மே மாதம் வரை வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்திக்கு ஆதாரமான அணைகள், பிற குடிநீர் ஆதாரங்கள் வறண்டன. இதனால் குடிநீர் பிரச்னை தலை தூக்கியது.
மேலும், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டவுடன் மழை காய்கறிகள் விவசாய பணிகளும் பாதித்தது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும் ஜூன் மாதத்தில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்கவில்லை.
மாறாக, ஜூலை இரண்டாவது வாரத்தில் துவங்கியது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக ஊட்டி, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் எமரால்டு பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக, மின் உற்பத்திக்கு காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது.
இந்த மழை செப்டம்பர் வரை நீடிக்கும் என்ற நம்பிக்கையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணிகளை துவக்கினர். ஆனால், ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து கடந்த இரு மாதங்களாக எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மாறாக நீர் பனிப்பொழிவு, பனிமூட்டமான காலநிலை நிலவியது. சில சமயங்களில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தியது.
கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் லேசான சாரல் மழை பொழிவு இருந்தது. இந்த சூழலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கேற்ப நேற்று முன்தினம் மாலை முதலே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிமூட்டமான காலநிலை நிலவியது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
அதிகபட்சமாக கோத்தகிரி அருகே கொடநாட்டில் 80 மிமீ., குன்னூர் ரூரல் 42 மிமீ., குன்னூர் கீழ் கோத்தகிரியில் 37 மிமீ., மழை பதிவானது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. ெதாடர்ந்து நேற்று அதிகாலை முதல் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது.
இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி மெதுவாக சென்றனர். காலை 10 மணிக்கு பிறகு பனிமூட்டம் முற்றிலுமாக குறைந்து இதமான காலநிலை நிலவியது. மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று அதிகாலை குன்னூர் அருகே லேம்ஸ்ராக் மற்றும் டான்பின் நோஸ் ஆகிய சுற்றுலா தளங்களுக்கு செல்ல கூடிய சாலையில் மரம் விழுந்தது.
இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதித்த நிலையில் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் வந்த தீயணைப்புத்துறையினர் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தி்ல் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (காலை 8.30 மணி நிலவரப்படி) மில்லி மீட்டரிடல்: ஊட்டி 11, நடுவட்டம் 2, மசினகுடி 16, குந்தா 12, அவலாஞ்சி 20, எமரால்டு 13, கெத்தை 16, கிண்ணக்கொரை 12, பாலகொலா 21, குன்னூர் 37, பர்லியார் 5, கேத்தி 7, குன்னூர் ரூரல் 41, கோத்தகிரி 25, கொடநாடு 80, கீழ்கோத்தகிரி 37, கூடலூர் 3 என மொத்தம் 446 மிமீ., மழை பதிவானது.
The post மாவட்டத்தில் நள்ளிரவில் இடியுடன் மழை அதிகாலையில் பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.