மாவட்டத்தில் தொடர் கனமழை

4 weeks ago 6

*மரம் விழுந்து வீட்டின் தடுப்புச்சுவர் சேதம்

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று காலை முதலே மழை பெய்து வருகிறது. மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மரங்கள் சாலைகளில் விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், கடந்த இரண்டு நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருவதால், மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, குன்னூர் மலைப்பாதையில் உள்ள மரப்பாலம் என்னும் பகுதியில், ராட்சத மரத்தின் ஒரு பகுதியானது, ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கு அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர் மேல் விழுந்ததை தொடர்ந்து முற்றிலுமாக சேதமானது. இதனால், மரப்பாலம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் தடைபட்டது.

இதன் தகவல் அறிந்த மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சேகர் மற்றும் குன்னூர் நகர உதவி செயற்பொறியாளர் ஜான்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, மின்வாரிய ஊழியர்கள் மூலமாக அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மாற்று டிரான்ஸ்பார்மர் மூலமாக, கிராமத்திற்கு மின் விநியோகம் வழங்கினர்.

அப்பகுதியிலேயே புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகளை நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக நிறைவடைந்தப்பின் புதிய டிரான்ஸ்பார்மர் மூலமாக மின்விநியோகம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரி: மலைப்பாதை சாலைகள் மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பகல் நேரங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்ட படி வாகனங்களை இயக்கி சென்றனர். காலநிலை மாற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருசில இடங்களில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு முதல் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழையும், சாரல் மழையும் பெய்தது. இதுதவிர, கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெஸ்ட்புரூக், கட்டபெட்டு, பாக்கியநகர், அம்பேத்கர் நகர், பேரார், மைனலை, பெட்டட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்தது.

இதனால் கோத்தகிரி, ஊட்டி, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் சாலைகளில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதன்காரணமாக, பகல் நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்ள வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை இயக்கி சென்றனர்.

தொடர்ந்து, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சாலையோர வியாபாரிகள் கடும் குளிரில் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கோத்தகிரி நகர் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சக்திமலை பகுதியில் தனியார் குடியிருப்பு அருகே தேயிலை தோட்டத்தில் உள்ள மரம் விழுந்ததில் வீட்டின் மேற்புற தடுப்புச்சுவர் சேதமடைந்தது. கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

வீட்டிற்குள் முடங்கிய தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, நேற்று காலை முதலே குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகள் மற்றும் நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

காலை நேரத்திலேயே மழை பெய்ய ஆரம்பித்ததால் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் உள்ள, தேயிலை தோட்ட விவசாயிகளும், கட்டுமான தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களும் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பனிமூட்டம் காரணமாக குன்னூர் மலைப்பாதையில் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்கள் இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் தொடர் கனமழை appeared first on Dinakaran.

Read Entire Article