தர்மபுரி, ஏப்.4: தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இரவு நேர அவசர சிகிச்சைகளை அளிக்க, 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை மருத்துவ மையம் அமைக்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. விவசாயத்திற்கு அடுத்த படியாக, குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு, கால்நடைகள் வளர்ப்பு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இதனாலேயே கால்நடைகளை விரும்பி மக்கள் வளர்க்கின்றனர். மாவட்டத்தில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 600 பசு மற்றும் எருமை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 386, செம்மறி ஆடுகள் 89 ஆயிரத்து 313, பன்றிகள் 993 என மொத்தம் 6 லட்சத்து 65 ஆயிரத்து 292 கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. இதுதவிர கோழிகள் 4 லட்சத்திற்கு மேல் வளர்க்கப்படுகிறது. மொத்தம் சுமார் 15 லட்சம் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் தினசரி 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் மற்றும் தொற்று நோய்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் நோய் தாக்கம் இல்லாமல் இருக்க, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தர்மபுரி இலக்கியம்பட்டியில் தலைமை கால்நடை மருத்துவமனையும், தாலுகா மற்றும் ஊராட்சிகளில் 80 கால்நடை மருந்தகங்களும் செயல்படுகின்றன. இதேபோல் 3 கால்நடை மருத்துவமனைகள் இயங்கி வருகிறது.
கோடைகாலம் தொடங்கியுள்ளதால், இரவு நேரங்களில் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் கடிப்பதால் பாதிப்பு மற்றும் தொற்று நோய் தாக்குதல் ஆகியவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற நேரங்களில், கால்நடைகளுக்கு தேவையான அவசர சிகிச்சை கிடைப்பதில் நடைமுறை சிரமங்கள் உள்ளது. இதற்கு தீர்வு காண, மாவட்டத்தில் 24 மணி நேரமும், கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் விரைவாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் தற்போதுள்ள மருத்துவ வசதிகள் மூலம் மாடுகள், வெள்ளாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான அவசர சிகிச்சைகளை 24 மணி நேரமும் அளிக்கும் வகையில், தர்மபுரியில் கால்நடை மருத்துவ மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆடு, மாடு, கோழிகள் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள், பறவைகள், பூனைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிராணிகளுக்கும், தேவையான அவசர மருத்துவ சிகிச்சைகள் இரவு நேரத்திலும் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
The post மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கால்நடை மருத்துவ மையம் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.