மாவட்டத்தில் எண்ணிக்கை அதிகரிப்பு; ஒரே நாளில் 352 பள்ளி பஸ்களில் ஆய்வு: 11 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து

4 hours ago 2

தர்மபுரி, மே 11: தர்மபுரி மாவட்டத்தில் 1,146 தனியார் பள்ளி பஸ்களுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஒரே நாளில் 352 பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 11 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.

தமிழக அரசின் பள்ளி வாகன சிறப்பு விதிகள் -2012யின்படி, ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ய மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவர் வருவாய் கோட்ட அலுவலர் ஆகும். உறுப்பினர்களாக வட்டார போக்குவரத்து அலுவலர், டிஎஸ்பி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை -1 ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் பொதுவான ஓர் இடத்தில் வாகனங்களின் தகுதி குறித்து கூட்டு ஆய்வு மேற்கொள்வார்கள். நடப்பு 2025-2026ம் ஆண்டு தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பாலக்கோடு பகுதி அலுவலகங்களை சேர்ந்த மொத்தம் 104 தனியார் பள்ளிகளில் இயங்கக் கூடிய 751 பள்ளி (அரூரை தவிர்த்து) வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாம் நேற்று தொடங்கியது. தரம்புரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த ஆய்வு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் முன்னிலை வகித்தார். முதற்கட்டமாக 352 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 11 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.

மேலும், சிறு குறைபாடுகளுடைய 14 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து, ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு ஆஜர்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த சோதனையில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ், தீயணைப்பு கருவி, இருக்கைகள் எண்ணிக்கை, படிக்கட்டுகளின் உயரம், முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், ஹண்ட் பிரேக் ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால், வாகனம் சிறைப்பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும், இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், ஆர்டிஓ காயத்ரி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கு பின்பு கலெக்டர் சதீஸ் கூறுகையில், தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் வாகனங்களை போக்குவரத்துத்துறை, காவல் துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து இயக்குவதற்கு தகுதியான வாகனங்கள் என சான்று அளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே, பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க படுகிறது. அந்த வகையில் நேற்று தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பள்ளி வாகனங்கள் வருடாந்திர கூட்டாய்வு நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் (தர்மபுரி, பாலக்கோடு, அரூர் பகுதி சேர்ந்து) 147 தனியார் பள்ளிகளில் இயங்கப்பட்டு வரும் 1146 வாகனங்கள் வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் நேற்று தொடங்கியது. ஆய்வின் போது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 352 வாகனங்களில் 11 வாகனங்களில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு, தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், சிறு குறைபாடுகளுடைய 14 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு முழு உடற்பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. வாகன ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளுக்கு ஏற்றவாறு வாகனத்தை இயக்க வேண்டும் என்றார்.

The post மாவட்டத்தில் எண்ணிக்கை அதிகரிப்பு; ஒரே நாளில் 352 பள்ளி பஸ்களில் ஆய்வு: 11 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article