
சென்னை,
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று இரவு நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"முதல்-அமைச்சருடன், அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகியோர் எங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இது சம்பந்தமாக 4 வார அவகாசம் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. போராட்டங்களை தள்ளிவைக்கவும் கேட்கப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பேசி, இனிமேலும் கால அவகாசத்தை தர இயலாது என்ற அடிப்படையில், நாளை (அதாவது இன்று) திட்டமிட்டபடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக தற்காலிக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக காலை 11 மணிக்கு நடைபெறும். போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு முன்னதாக, அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
எங்கள் கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை. அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது. நிராகரித்து இருந்தால் போராட்டத்தை முன்னெடுத்து சென்றிருப்போம். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு மீண்டும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் முடிவெடுப்போம். அடுத்தகட்டமாக அரசுடனான பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளோம். பட்ஜெட்டில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்."
இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது தாஸ் உள்ளிட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.