விவசாயத்தில் பல வெற்றிக்கதைகளை நாம் கேட்டிருப்போம். அவை அனைத்தையும் விட ஆரோக்கியமேரியின் விவசாயக் கதை நெகிழ்ச்சியாக இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியைச் சேர்ந்த இவர் தனது தந்தை மறைவுக்குப் பிறகு தனது தாயார் அருள்மேரியுடன் இணைந்து விவசாயத்தில் சவால்களைக் கடந்து சாதனை செய்து வருகிறார். குறிப்பாக சிப்ஸ் தயாரிப்புக்கு ஏற்ற மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து அசத்தலான லாபம் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் ஆரோக்கியமேரியைச் சந்தித்தோம். “பிபிஏ படிச்சிட்டு, ஒரு பெட்ரோல் பங்க்கில் உதவி மேனேஜரா வேலை பார்த்தேன். 5 வருஷத்துக்கு முன்ன உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பா இறந்த பின்னாடி கடுமையான சவால்களை சந்திக்க ஆரம்பிச்சோம். எங்களுக்கு சொந்தமான வயலைக் குத்தகைக்கு விட்டோம். அதுலயும் சில பிரச்னைகள். அப்போதான் அம்மா அருள்மேரியும், நானும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். லாபமோ, நஷ்டமோ நம்ம நிலத்துல நாமளே விவசாயம் பார்ப்போம்னு களத்துல இறங்குனோம். பல இடங்களில் என்னை வேலைக்கு வரசொன்னாங்க. வயசான அம்மாவை மட்டும் வயலில் விட்டுட்டு போக மனசு இல்ல. அதனால நானும் உங்கக்கூடவே வயல் வேலையை பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு விவசாயத்துல இறங்கிட்டேன். நிலத்து மேல முழு நம்பிக்கை வச்சு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில ஒரே சாகுபடி மட்டும் செய்யாம நெல், சோளம், கடலை, எள், உளுந்துன்னு சாகுபடி செய்தோம். கொஞ்சம் கொஞ்சமாக சாகுபடி முறைகளைக் கத்துக்கிட்டேன். சிப்ஸ்க்கு மட்டும் பயன்படும் வெள்ளை மரவள்ளிக்கிழங்கு பற்றி உறவினர் மூலம் தெரியவந்தது. அதை சாகுபடி செய்ய ஆரம்பிச்சோம்’’ என தமது குடும்பம் பற்றியும், விவசாயத்திற்கு வந்த கதையையும் சுருக்கமாக கூறிய ஆரோக்கியமேரி, மரவள்ளி சாகுபடி விவரம் குறித்து விளக்கினார்.
`
` மரவள்ளியைப் பயிர் செய்ய நிலத்தை மூன்று முறை நன்றாக உழுதோம். 4வது முறையாக மீண்டும் ஒருமுறை உழவு ஓட்டினோம். கடைசி உழவின்போது 25 டன் தொழுஉரம் இட்டு மண்ணோடு நன்கு கலந்துவிட வேண்டும். மாட்டுச்சாணம் மற்றும் நெல் கருக்கையை பயன்படுத்தினோம். பிறகு பார் அமைத்து மரவள்ளி விதைக்கரணைகளை நடவு செய்தோம். நன்றாக விளைந்த மரவள்ளிக்குச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் இருந்து விதைக்கரணைகளை நறுக்கிக்கொள்ளலாம். விதைக்கரணைகள் அரை அடி நீளத்துடன் 8-10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதைக்கரணைகளை பூசண மருந்துக் கரைசலில் ஊற வைத்து நடவு செய்தால் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். நடவு செய்தவுடன் முதல் பாசனமும், அதன்பிறகு மூன்றாவது நாள் உயிர் தண்ணீரும் விட்டோம். 3 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அதற்கு மேல் 8வது மாதம் வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்தால் போதும். நாங்க சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து இருப்பதால் தேவைக்கு தகுந்தாற்போல் பாசனம் செய்வோம். விதைக்கரணை ஊன்றிய பிறகு, அதாவது நடவு செய்த 20வது நாள் முதல் களை எடுப்போம். அப்போது முளைக்காத கரணைகளுக்கு பதில் புதிய கரணைகளை நடவு செய்வோம். பிறகு 3வது மாதம் ஒருமுறை களை எடுத்து மண் அணைப்போம். 60வது நாளில் செடிக்கு இரண்டு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றி விடுவோம். 5வது மாதத்தில் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், டிஏபி உரங்களைக் கலந்து தெளிப்போம். அதேபோல் 7வது மாதத்திலும்
உரமிடுவோம்.
10 மாதத்தில் அறுவடை செய்துவிடலாம். இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறத்திற்கு மாறி உதிர ஆரம்பிக்கும். நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இதுதான் அறுவடைக்கான அறிகுறி. அந்த சமயத்தில் மொத்த வியாபாரிகளே ஆட்களை அழைத்து வந்து அறுவடை செய்து கிழங்குக்கு தகுந்தாற்போல் உடனடியாக பணம் தருவாங்க. வியாபாரிங்க பெரும்பாலும் பெங்களூரில் இருந்து வருவாங்க. முதல்முறை சாகுபடி செய்தபோது குறைந்த லாபம்தான் எடுத்தோம். போன வருசம் சாகுபடி செய்தபோது 19 டன் அளவுக்கு கிழங்கு கிடைத்தது. இதில் செலவுகள் போக ரூ.1.88 லட்சம் லாபமாக கிடைச்சது.நாங்கள் 2 ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு, அரை ஏக்கரில் சோளம், அரை ஏக்கரில் நெல் சாகுபடி செய்து இருக்கிறோம். மேலும் வாழை, 150 தென்னை மரங்கள் வளர்க்கிறோம். பெண்கள் விவசாயிகளாக இருந்தால் அறுவடை செய்ய முடியாதுன்னு பலரும் பேசினாங்க. ஆனா அதை உடைத்து இப்போ நாங்களும் விவசாயத்துல கலக்குறோம். இப்போது நாங்க கிழங்கு சாகுபடி செய்து நல்ல லாபம் எடுத்ததைப் பார்த்து பலரும் இதையே சாகுபடி செய்றாங்க. விவசாயம் மூலம் வருடத்திற்கு எங்களுக்கு ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இது எங்களுக்கு நிறைவா இருக்கு’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ஆரோக்கியமேரி: 84281 14347
The post மாற்றம் தந்த மரவள்ளி! appeared first on Dinakaran.