உலகம் உயிரோட்டம் பெற மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள், மட்டுமின்றி பார்வதி தேவியும், சிவபெருமானை நோக்கி பல்வேறு சூழலில் விரதமிருந்து பூசித்த நாளை சிவராத்திரி என்பார்கள். அதே போல பாற்கடலைக் கடைந்த போது அதில் வெளியான ஆலகால விஷத்தை உட்கொண்டார் சிவபெருமான், ஈசன் பாதிக்காமல் இருக்க தேவர்கள் முனிவர்கள் இரவு முழுவதும் பூஜித்ததையும் சிவராத்திரி என அழைப்பர். இப்படி பல சம்பவங்கள் உண்டு. மகா சிவராத்திரி பூஜை அனைத்து சிவலாயங்களிலும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டாலும், குறிப்பிட்ட நான்கு சிவாலயங்களில் தங்கி ஈசனை தரிசிப்பது கூடுதல் பலன் வழங்கும்.ஒரு சமயம் விநாயகப் பெருமான் திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வழிபட்டார். அப்போது சிவன் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகப் பெருமான் தன்னையும் சேர்த்து வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டது. இதனால் சினமுற்ற இறைவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தையும் இழக்க சாபமிட்டார். சாப விமோசனம் வேண்டி சர்ப்பங்கள் அனைத்தும் பல காலம், பல திருத்தலங்களில் பூஜித்தும் சிவனருள் கிட்டவில்லை.
மிகவும் வருத்தமுற்ற நாகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிசேஷன் தலைமையில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா திருப்பாம்புரம் அருள்மிகு வண்டு சேர் குழலி சமேத திரு பாம்புரநாதர் கோயில் வந்து சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றன. அது முதல் இத்தலத்தில் எவரும் பாம்பு தீண்டி இறந்ததில்லை.திருபாம்புர நாதர் கருவறையில் அவ்வப்போது நாகம் வந்து வணங்குவதும், குறிப்பாக ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நாகம் வந்து செல்வதும் இப்போதும் காணலாம். லிங்கத் திருமேனியில் பலமுறை நல்ல பாம்பு ஊர்ந்து வந்து சட்டை உரித்துச் ெசன்றுள்ளது. இங்குள்ள ஈசன் திருமேனியில் ஆதிசேஷன் தரிசித்த கருவறையில் லிங்கம் அமைந்துள்ளது. உலகை தாங்கும் ஆதிசேஷன், அதன் சுமையால் உடல் நலிவுற்று ஈசனை தொழுத போது, அவர் ‘‘மகா சிவராத்திரியன்று கும்பகோணம், திருநாகேஸ்வரம் திருப்பாம்புரம், நாகூர் ஆகிய தலங்களில் எம்மை வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்’’ என அருளினார்.
அவ்வாறே மகாசிவராத்திரியன்று ஆதிசேஷன், முற்கால பூஜையின் போது கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் கால பூஜையின் போது திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் காலப் பூஜையின் போது திருப்பாம்புரம் பாம்புர நாதரையும், நான்காம் கால பூஜையின் போது நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு உடல் வளரும், சிவனருளும் பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது.சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில் ஆதிசேஷன் வழிபட்ட திருபாம்புரம் கோயிலில் பிரம்மாண்டமாக பூஜை நடத்தப்படும். ஆதிசேஷன் உற்சவ லிங்கம் விக்ரகம் புறப்பாடு நடக்கும் ஆதிசேஷனுக்கு திருஉலா நடத்துவது இங்கு மட்டும் தான்.பொதுவாக சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் பக்தி, ஞானம் கிடைப்பதோடு, அசுவமேத யாகம் செய்த பலனும் கிட்டும். அதே நேரத்தில் திருபாம்புரத்தில் சிவராத்திரியில் சிவ வழிபாடு செய்தால், பிற பலன்களுடன் சர்ப்ப தோஷமும் நீங்கும். பதினெட்டு ஆண்டு ராகு தசை, ஏழு ஆண்டு கேது தசை மற்றும் தோஷ நிவர்த்தி கிட்டும். திருமணத்தடை நீங்கி நலமும் வளமும் ஏற்படும் என்பது ஐதீகம்.
The post மாற்றத்தை ஏற்படுத்தும் மகாசிவராத்திரி appeared first on Dinakaran.