மதுரை, ஜன. 14: தமிழகத்தில் நாளை (ஜன.15) திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சி மற்றும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளுவர் தினம் நாளை (ஜன.15) கொண்டாடப்படுகிறது. இதனால் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க நாளை அனைத்து வித இறைச்சிகளுக்கான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை நாளை விற்பனை செய்யக்கூடாது. இதற்கான கடைகளை திறக்கவும் கூடாது. விதிமீறி செயல்படுவோரின் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு உத்தரவின்படி மதுக்கடைகள் நாளை மூடப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், பார்கள், எப்.எல்.2 , எப்.எல். 3, எப்.எல்.3 ஏ மற்றும் எப்.எல்.3 ஏஏ உரிமம் பெற்றுள்ள மதுபானக் கூடங்கள் நாளை மூடியிருக்க வேண்டும். நாளை எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது. மீறி மதுபானம் விற்பனை செய்தாலோ, மதுபார் செயல்பட்டாலோ சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மார்கழி திருவாதிரை நாளை திருவள்ளுவர் தினம் இறைச்சி, மதுபான விற்பனைக்கு தடை appeared first on Dinakaran.