மாரண்டஅள்ளி ராசிகுட்டை அருகே ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு முன்னாள் இணை இயக்குனர் ஆய்வு

2 months ago 18

தர்மபுரி, செப்.30:தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில், ராசிகுட்டை என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் அருகேயுள்ள குன்றின் அடிவாரத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, பானை ஓடு ஒன்று தென்பட்டது.

மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் வித்யாகரன் என்ற மாணவன், அதனை அகற்ற முயன்ற போது, அது ஒரு மூன்று கால்கள் உள்ள ஜாடி ஒன்றின் பகுதி என்பதை கண்டு கொண்டார். அதன் ஒரு பகுதி கொஞ்சம் உடைந்திருந்தது. அதுமட்டுமின்றி மேலும் இரண்டு உடைந்த ஜாடிகளும் அங்கே கிடைத்தன. இந்த மண்பாண்டங்களை மாணவன் விதியாகரன் தன்னுடைய வரலாற்று ஆசிரியர் வீரமணியிடம் காட்டினார். அவர் உடனடியாக தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் தலைவர் சிசுபாலன், தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு கண்டுபிடிப்பு குறித்து கூறினார்.

தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மருத்துவர் செந்தில், ராஜன் ஆகியோர் நேற்று ராசிகுட்டைக்கு சென்று, அந்த மண்பாண்டங்களை ஆய்வு செய்தனர். இவற்றை ஆய்வு செய்த சுப்பிரமணியன், இவை 3500 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தெரிவித்தார். ராசிகுட்டை குன்றின் ஓரங்களில் தொல் பழங்கால மனிதர்களின் ஈமச் சின்னங்களும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தில் பங்குநத்தம், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் அகழ்வாய்வுகளிலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்து வந்திருப்பதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழ்வாய்வில், பழந்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. சென்னா நூர் பெரும் நகரமாக இருந்திருக்கக் கூடும். இவ்வூர் கீழடி காலத்துக்கும் முந்தைய வாழ்விடமாகும். இக்கண்டுபிடிப்புகள், தர்மபுரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்து வந்திருப்பதைக் காட்டுகின்றன என டாக்டர் செந்தில் தெரிவித்தார்.

The post மாரண்டஅள்ளி ராசிகுட்டை அருகே ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு முன்னாள் இணை இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article