மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மாம்பாக்கம் மற்றும் பாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் மதுராந்தகம் அருகே 30 கி.மீட்டர் வேகத்தல் இயக்கப்படுவதால், ஒரு மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், வியாழக்கிழமை முதலே கன மழை பெய்து வருகிறது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மதுராந்தகம் பகுதியில் சுமார் 123 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், மாம்பாக்கம், பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், மதுராந்தகத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.