மாமல்லபுரம்: மாமல்லபுரம் கோனேரி ஏரியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை, மாவட்ட கலெக்டர் தலையிட்டு பணிகள் துவங்க நடவடிக்கை எடுப்பாரா? என சுற்றுலாப் பயணிகள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். மாமல்லபுரத்தில் பொதுப்பணித் துறை சாலையையொட்டி, கோனேரி ஏரி உள்ளது. கோனேரி ஏரி கிட்டதட்ட 8 ஏக்கர் பரப்பில், பல அடி ஆழத்துடன் இருந்த இந்த ஏரி பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து கேட்பாரற்று காணப்பட்டது.
இந்த ஏரியை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி ஆழப்படுத்தி, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு, படகில் சவாரி செய்யவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டுமென சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், பொதுப்பணித்துறை-தொல்லியல் துறை ஆகிய 2 துறைக்கும் இடைப்பட்ட பகுதியில், இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரியை எந்த துறை நிர்வகிப்பது என்பது குறித்து 2 துறைகளுக்கும் மத்தியில் மிகப் பெரிய குழப்பம் நீடித்து வந்தது. இதனால், ஏரியை தூர்வாரி சீரமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த ஏரிக்கும் எங்கள் துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த, 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் அரசு முறை பயணமாக மாமல்லபுரத்தில் சந்தித்து புராதன சின்னங்களை கண்டு ரசித்து, பல்வேறு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டனர்.
மேலும், இவர்கள் மாமல்லபுரம் முழுவதும் அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடந்தது. இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சென்னையை சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளை ஏரியில் ஒரு குறிப்பிட்ட ஆழம் தூர் வாரினர். அப்போது, பெய்த மழையில் அந்த ஏரி முழு கொள்ளளவை எட்டி ரம்மியாக காட்சி அளித்தது. தற்போது, அந்த ஏரியில் முழுவதும் செடி, கொடிகள் அடர்ந்தும், தாமரை இலைகள் முளைத்தும் போதிய பராமரிப்பு இன்றி சீரழிந்து காணப்படுகிறது.
கடந்தாண்டு, மே மாதம் கோனேரி ஏரியில் பல்லுயிர் இனப்பெருக்கத்தை பாதுகாக்கவும், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீர் மேலாண்மையின் ஒரு எடுத்துக்காட்டாக சூற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அதிகாரிகள் கூறுகையில், ‘கோனேரி ஏரியை சுற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதை அமைத்து பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அங்கு, விலங்குகள் பறவைகள் மற்றும் பல்வேறு உயிரினங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகை அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம் விளக்கிக் கூற ஏற்பாடு செய்யப்படும்’ என்றனர். ஆனால், கடந்த 9 மாதங்களை கடந்தும் கோனேரி ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. பேரூராட்சியாக இருந்தபோது தான் பணிகள் மேற்கொள்ளவில்லை. தற்போது, நகராட்சியாக தரம் உயர்ந்துள்ள நிலையில், கோனேரி ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் துவங்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நடவடிக்கை எடுப்பாரா? என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
* உள்ளூர் மக்கள் கோரிக்கை
மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரித்து வருகிறது. இதனால், கோனேரி ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி முடிந்தால் மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால், இந்த பகுதி சிறு வியாபாரிகள் பயன்பெருவார்கள். எனவே, பூங்கா பணியினை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை
கோனேரி ஏரி பராமரிப்பு இன்றி பல ஆண்டுகளாக செடி, கொடிகள், தாமரை இலைகள் முளைத்து அலங்கோலமாக காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக தலையிட்டு செடி, கொடிகள், தாமரை இலைகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post மாமல்லபுரம் கோனேரியில் கிடப்பில் போடப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா பணி தொடங்கப்படுமா? சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.