மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகல துவக்கம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர், 8 நாடுகளை சேர்ந்த 20 பைலட்டுகள் பங்கேற்று அசத்தல்

2 hours ago 2

மாமல்லபுரம்: தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 10வது ஆண்டாக தமிழ்நாட்டில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் இந்தாண்டுக்கான பலூன் திருவிழா நேற்று காலை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை இசிஆர் சாலையொட்டி தொடங்கியது.

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பலூன் திருவிழாவை தொடங்கி வைத்து, பலூனில் ஏறி தரையில் இருந்து சிறிது தூரம் மேலே சென்று இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர். நேற்று துவங்கிய இவ்விழா, நாளை மறுதினம் (12ம் தேதி) வரை, 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த 20 ஏர் பலூன் பைலட்டுகள் கலந்துகொண்டு பல்வேறு வடிவங்கள் மற்றும் தனித்துவமான வண்ணங்களில் பலூன்களை பறக்க விட்டனர்.

நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத் துறை இயக்குனர் ஷில்பா பிராபகர், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சோழிங்கநல்லூர் அரவிந் ரமேஷ், திருப்போரூர் சேர்மன் இதயவர்மன், சப்-கலெக்டர் நாராயண சர்மா, திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, பேரூராட்சி தலைவர்கள் தேவராஜ், யுவராஜ், ஊராட்சி தலைவர்கள் பொன்னுரங்கம், அமுதா குமார், சோபனா தங்கம் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகல துவக்கம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர், 8 நாடுகளை சேர்ந்த 20 பைலட்டுகள் பங்கேற்று அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article