மானிய விலை குழாய்கள் வெளி நபர்களுக்கு விற்பனை மேலும் 2 பேர் அதிரடி கைது

3 hours ago 1

*தோட்டக்கலைத்துறை அலுவலர் சஸ்பெண்ட்?

கூடலூர் : தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பிவிசி பைப்புகளை சட்டவிரோதமாக வெளிநபருக்கு விற்பனை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தோட்டக்கலைத்துறை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என தெரிகிறது.நீலகிரி மாவட்டம் கூடலூர் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பிவிசி குழாய்கள் சட்ட விரோதமாக வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமிக்கு கடந்த 20ம் தேதி புகார் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை செய்தபோது பந்தலூர் பகுதியில் தோட்டக்கலை துறை அலுவலராக பணிபுரியும் தயானந்தன் (38) என்பவர் சுமார் 150 குழாய்களை பந்தலூர் தாலுகா நெல்லியாளம் பகுதியில் வசிக்கும் சதானந்தன் (40) என்பவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஊட்டியில் உள்ள தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின் பேரில் விற்பனை செய்யப்பட்ட குழாய்களை திருப்பி ஒப்படைக்க செய்த கூடலூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கூடலூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, தோட்டக்கலைத்துறை அலுவலர் தயானந்தனை கைது செய்தார்.

சதானந்தன் மற்றும் அவரது டிரைவர் முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கூடலூர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிபதி சசிக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் டிரைவர் முத்துக்குமாரை ஜாமினில் விடுவித்த நீதிபதி மற்ற இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர் தயானந்தன் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட உள்ளார்.

The post மானிய விலை குழாய்கள் வெளி நபர்களுக்கு விற்பனை மேலும் 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Read Entire Article