மானாமதுரை அருகே வேன் கவிழ்ந்து விபத்து இந்தோ-திபெத் பாதுகாப்பு போலீசார் 28 பேர் காயம்

3 months ago 16

மானாமதுரை : மானாமதுரை அருகே போலீஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயம் அடைந்தனர்.சிவகங்கை மாவட்டம், அரசனூரை அடுத்த இலுப்பக்குடி கிராமத்தில், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பட்டாலியன் பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திற்கு, பாதுகாப்பு படையை சேர்ந்த 28 போலீசார், பயிற்சிக்காக நேற்று முன்தினம் ஒரு வேனில் சென்றனர். பின்னர், அங்கு பயிற்சி முடிந்து நேற்று காலை மீண்டும் வேனில் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தில் உள்ள நான்குவழிச்சாலை மேம்பாலத்தை கடக்க முயன்றபோது, முன்னால் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி கறிக்கோழி ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் அரசு பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது போலீசார் சென்ற வேன், அரசு பஸ்சின் பின்புறம் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனை ஓட்டிய ராஜஸ்தானைச் சேர்ந்த போலீஸ்காரர் ஜோனஸ் ராஜ்மீனா(34) படுகாயமடைந்தார். மற்ற 27 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அதே போல அரசு பஸ்சில் பின்புறம் அமர்ந்திருந்த சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மானாமதுரை அருகே வேன் கவிழ்ந்து விபத்து இந்தோ-திபெத் பாதுகாப்பு போலீசார் 28 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article