சென்னை: முன்னணி நடிகைகளுக்கு கொக்கைன் விற்பனை செய்ததாக போதை பொருள் சப்ளையர் பிரதீப்குமார் மற்றும் நைஜீரிய நாட்டு பெண் ஆகியோர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் கொக்கைன் பயன்படுத்திய நடிகைகள் தொடர்பான முழு விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி இரவு தூண்டில் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் இசிஆர் ராஜா (36) அவரது நண்பரான முன்னாள் அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் (33), தொழிலதிபர் கணேஷ்குமார், தனசேகர் ஆகியோர் மது அருந்திய போது, அருகில் மது அருந்தி கொண்டிருந்த ஓய்வுபெற்ற கூடுதல் டிஎஸ்பி மகன் செல்வா தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த மோதல் தொடர்பாக இசிஆர் ராஜா, அதிமுக நிர்வாகி அஜய்வாண்டையார், முன்னாள் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பிரசாத், முன்னாள் கூடுதல் டிஎஸ்பி மகன் செல்வா என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். பிரச்னை தொடர்பாக முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத்திடம் போலீசார் விசாரணை நடத்திய போது, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார்(எ)பிரடோ(38) என்பவரிடம் இருந்து அதிகளவில் கொக்கைன் என்ற போதைப் பொருள் வாங்கி நடிகர் காந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு கொடுத்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கொக்கைன் விற்பனை செய்த பிரதீப்குமார் கானா நாட்டைச் சேர்ந்த ஜான்(38) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நடிகர்கள் காந்த், கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சினிமா பிரபலங்களுக்கு கொக்கைன் விற்பனை செய்தில் பிரதீப்குமார் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த சாரா கொமாமா ஆகியோர் முக்கிய பங்காற்றியது விசாரணையில் உறுதியானது. 2 பேரையும் சூளைமேடு போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் சேலத்தை சேர்ந்த பிரதீப்குமார் மூலம் நடிகர் ஸ்ரீகாந்தும், விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெஸ்வீர்(எ)கெவின் என்பவர் மூலம் நடிகர் கிருஷ்ணா ஆகியோர் கொக்கைன் வாங்கியது தெரியவந்தது.
இரண்டு நடிகர்கள் பரிந்துரைப்படி முன்னணி நடிகைகள் சிலர் நேரடியாக கொக்கைன் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. சாரா கொமாமா மூலம் கொக்கைன் நேரடியாக நடிகைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நைஜீரியாவை சேர்ந்த பெண் சாரா கொமாமா, தன்னிடம் கொக்கைன் வாங்கிய நடிகைகள் யார் யார்? அவர்களுக்கு எத்தனை கிராம் கொக்கைன் விற்பனை செய்யப்பட்டது. எந்த இடத்தில் கொக்கைன் தரப்பட்டது தொடர்பான முழு தகவல்களையும் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதேபோல் கொக்கைன் வாங்கிய நடிகர்கள் பட்டியலை பிரதீப் குமாரும் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
இருவரும் அளித்த வாக்குமூலத்தின் படி கொக்கைன் வாங்கி பயன்படுத்தி வந்த நடிகைகள் தொடர்பான முழு விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதன் பிறகு, கொக்கைன் வாங்கிய நடிகைகள் யார் யார் என்பது குறித்த விபரங்கள் முழுமையாக வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொக்கைன் பயன்படுத்திய விவகாரத்தில், முன்னணி நடிகைகள் சிலர் சிக்கியுள்ளதால், சென்னை காவல்துறை ரகசியமாக கொக்கைன் வாங்கி பயன்படுத்திய நடிகைகளிடம் ஓரிரு நாளில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போதை பொருளை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. போதை பொருள் பயன்படுத்தியதில் எந்த சமரசமும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் கொக்கைன் பயன்படுத்திய நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.
The post முன்னணி நடிகைகளுக்கு கொக்கைன் விற்றதாக சப்ளையர் பிரதீப்குமார், நைஜீரிய பெண் பரபரப்பு வாக்குமூலம்: ஆதாரங்களுடன் முழு பட்டியலை எடுக்கிறது போலீஸ் appeared first on Dinakaran.