மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் நேற்றிரவு பெங்களூரில் இருந்து பயணிகள் விமானம் மூலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி வந்திறங்கினார். விமானநிலையத்தில் நிருபர்களுக்கு தொல்.திருமாவளவன் எம்பி பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமீபத்திய கூட்டத்தொடரில், மாநில சுயாட்சி கோரிக்கைக்கு மீண்டும் வலுசேர்க்கும் வகையில், ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது.
இக்கோரிக்கையை நீண்ட காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வைத்து வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் மாநில சுயாட்சி மாநாட்டையும் நடத்தியுள்ளோம். இம்மாநாட்டில் அப்போதைய எதிர்க்கட்சியாக செயல்பட்ட இன்றைய முதல்வர் பங்கேற்று உரையாற்றினார். தமிழக அரசை ஆளுநர் ரவி, தன் இஷ்டம் போல் ஆட்டி படைக்க விரும்பினார். இதனால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 பல்கலை மசோதாக்களையும் நீதிமன்றம் தலையிட்டு சட்டமாக்கும் நிலை ஏற்பட்டது சிறப்புமிக்க நிகழ்வு. இது, இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும்.
சமீபகாலமாக ஜாதி பாகுபாடுகள் குறித்து அதிகளவில் பேசப்படுகிறது. அதில் ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என சாதியவாத அமைப்புகளால் பேசப்படுகிறது. மேலும், சாதி அடையாளங்களான கயிறு கட்டுதல், கரும்பலகையில் சாதி சார்ந்த முழக்கங்களை எழுதுதல், மாணவர்களிடையே சாதிய மோதல் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. இதில் ஜாதியவாத, மதவாத இயக்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதுபோன்ற கலாசாரங்களை ஆய்வு செய்து, விரிவான அறிக்கை ஒன்றை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளனர். அவர்களின் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் பின்னணியில் இருக்கக்கூடிய ஜாதிய, மதவாத அமைப்புகள் எதை பற்றி பேசினாலும் கவலைப்படாமல், ஆளுங்கட்சி மீது குறை கூறுவது பொறுப்பானவர்களின் பதிலாக தெரியவில்லை. அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவது அவசியம்தான். எனினும், ஒட்டுமொத்தமாக அரசு மட்டுமே பொறுப்பு என்ற தோற்றத்தை உருவாக்குவது ஏற்புடையது அல்ல. நாடு முழுவதும் ஜாதிய மற்றும் மதவாத நஞ்சுகள் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்களில் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. இவற்றை உடனடியாக தடுக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.
The post மாநில சுயாட்சிக்கு வலுசேர்க்க அரசு சார்பில் உயர்மட்ட குழு: திருமாவளவன் எம்பி பாராட்டு appeared first on Dinakaran.