கோவை, மே 15: ேகாவை மாநகராட்சி மாமன்ற (கவுன்சில்) அவசர கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநகரில் 100 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 103 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநகராட்சி பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவக்கப்பட உள்ளது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. கோவை மாநகராட்சி பள்ளிகளில், அதிக மாணவர் சேர்க்கை கொண்ட 50 பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவக்கப்படும் என 2025-2026ம் ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தேவையான வகுப்பறை, கற்பித்தல் பாடப்புத்தகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் 8 மாநகராட்சி நடுநிலை பள்ளிகள், 51 மாநகராட்சி ஆரம்ப பள்ளிகள் என மொத்தம் 59 பள்ளிகளில் எல்கேஜ மற்றும் யுகேஜி வகுப்புகள் துவக்க அனுமதி கோரி நேற்றைய கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது. இத்திட்டத்தின்கீழ், 59 ஆசிரியர்கள் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம் தலா ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும், 59 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இதேபோல், மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா வளாகத்தில், பிரம்மாண்ட ராட்டினம் மற்றும் ஜிப் லைன் அமைய உள்ளது. இது தொடர்பான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேறியது. இப்பூங்கா வளாகத்தில், பிரமாண்ட ராட்டினம் மற்றும் ஜிப்லைன் அமைக்கப்பட்டு, அதன்மூலம் உயரத்தில் இருந்து கோவை மாநகரை கண்டுகளிக்க ஏதுவாக திட்ட அறிக்கை தயாரிக்கவும், நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுமதி பெறவும் முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டம், தனியார் பங்களிப்புடம் நிறைவேற்றப்பட உள்ளது.மாநகரில் பாதாள சாக்கடை இணைப்புக்கு வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணம் தொடர்பான தீர்மானமும் ஒருமனதாக நிறைவேறியது. அதன்படி, குறைந்தபட்சம் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புக்கு ரூ.7,500 வைப்புதொகை, வணிக பயன்பாட்டுக்கு ரூ.15 ஆயிரம், தொழிற்சாலைகளுக்கு ரூ.15 ஆயிரம், கல்வி நிறுவனம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பிற கட்டிடங்களுக்கு ரூ.15 ஆயிரம் என வைப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதிகபட்சமாக 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு ரூ.40 ஆயிரம், வணிக பயன்பாடு கட்டிடத்துக்கு ரூ.80 ஆயிரம், தொழிற்சாலைக்கு ரூ.80 ஆயிரம், கல்வி நிறுவனம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பிற கட்டிடங்களுக்கு ரூ.80 ஆயிரம் என வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. பாதாள சாக்கடை இணைப்புக்கு மாதாந்திர கட்டணம் குறைந்தபட்சம் ரூ.120ல் இருந்து அதிகபட்சம் ரூ.900 வரை நிர்ணயம் செய்யப்பட்டது.
72வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் பேசுகையில், ‘‘அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு ‘காலனி’ என்ற பெயர் நீக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, 72வது வார்டு சுந்தரம் வீதியில் உள்ள சிடிடி காலனி என்பதை சி.டி.தண்டபாணி நகர் என மாற்றி அறிவிக்க வேண்டும். மாநகரில் சர்வதேச அளவிலான திட்டங்களை நிறைவேற்ற ஏதுவாக, கவுன்சிலர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல வேண்டும்’’ என்றார்.
5வது வார்டு கவுன்சிலர் நவீன்குமார் பேசுகையில், ‘‘மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, மின் மயானங்களின் பற்றாக்குறையை சரிசெய்யும் பொருட்டு, மாநகர எல்லைக்குள் குறைந்தபட்சம் 2 மின்மயானங்களை தேர்வு செய்து, அங்கு 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் ஊழியர்களை நியமித்து, சடலங்களை எரியூட்டும் பணி நடைபெறுவதற்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி பேசுகையில், ‘‘மாநகர் முழுவதும் உயர்த்தப்பட்ட 6 சதவீதம் சொத்து வரி, ஒரு சதவீதம் அபராத வரி ஆகியவற்றை நிறுத்திவைக்க வேண்டும். டிரோன் கேமரா மூலம் கட்டிட அளவீடு செய்யப்படாது என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகும் இந்த அளவீடு நடக்கிறது. இதை, அடியோடு ரத்துசெய்ய வேண்டும்’’ என்றார்.
மேயர் ரங்கநாயகி பேசுகையில், ‘‘மாநகர எல்லைக்குள் செயல்படும் மின்மயானங்களை 24 மணி நேரமும் இயக்கவேண்டும் என மாநகராட்சிக்கு பெரும்பாலான கோரிக்கைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதுபற்றி பரிசீலித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும்’’ என்றார். மாநகராட்சி 56வது வார்டில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன எனவும் மேயர் அறிவித்தார்.
The post மாநகராட்சி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவக்க திட்டம் appeared first on Dinakaran.