
திருநெல்வேலி மாவட்டம் அம்பை சந்தைமடம் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் (45 வயது). டீக்கடை தொழிலாளியான இவர் 2022-ம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்பை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ரத்தினத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுரேஷ் குமார் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட ரத்தினத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.
போலீசாரின் துரித நடவடிக்கையால் இந்த ஆண்டில் இதுவரை 11 போக்சோ வழக்குகளில் 11 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்தார்.