சென்னை: அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்தில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை முதல்வர் ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது. பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துகிறேன்.