அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எப்.ஐ.ஆர். வெளியீடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

13 hours ago 1

சென்னை: எப்.ஐ.ஆர். வெளியாவதற்கு காரணமான அனைவரும் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் சமூக விரோதிகளால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர், மன உளைச்சலுக்கும், வலிகளுக்கும் துயரத்துக்கும் உள்ளான சூழலிலும் தைரியமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையாக (FIR) இணையத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி, செல்போன் எண் என அனைத்து விபரங்களும் தெரியும் வண்ணம் காவல்துறை வெளியிட்டுள்ளது.

பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்ற வழிகாட்டல் முறைகளும், விசாகா குழுவின் சிபாரிசுகளும் உள்ள சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விபரத்தையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன் ?. காவல்துறையினரின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

பாதிக்கப்பட்ட பெண்ணும், அவர்களை சார்ந்தவர்களும் சொல்லொணா துயரத்தை வலியை சுமந்து கொண்டிருக்கும் இச்சூழலில், பாதிக்கப்பட்டவர்களோடு சட்ட ரீதியாக, மனிதநேயத்தோடு நின்று நீதிக்காக செயலாற்ற வேண்டிய காவல்துறை அரசு நிர்வாக அமைப்புகள் அதற்கு எதிர்திசையில் செயல்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே, மாணவியின் எப்.ஐ.ஆரை வெளியிட்ட பெருநகர சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டு இதற்குக் காரணமான அனைவரும் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இவ்வழக்கில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும், அவர்களின் விபரங்களை வெளியிடாமல் இருப்பதும் காவல்துறை மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எப்.ஐ.ஆர். வெளியீடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்! appeared first on Dinakaran.

Read Entire Article