சேலம்: சேலம் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் (57) என்பவர், இப்பள்ளியில் அறிவியல் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, ஆய்வகத்திற்கு வந்த மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், இதுகுறித்து வகுப்பாசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோ அளித்த தகவலின் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதில், மாணவிகளிடம் ஆய்வக உதவியாளர் குமரேசன் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் ஆய்வக உதவியாளர் குமரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. விசாரித்த அவர், ஆய்வக உதவியாளர் குமரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
The post மாணவிகளிடம் சில்மிஷம்: அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.