சென்னை,
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொழில்நுட்பக் கோளாறால் எப்.ஐ.ஆர். வெளியானதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே எப்.ஐ.ஆரில் பதிவு செய்ய வேண்டும். அதில் போலீசார் எந்த திருத்தமும் செய்யக்கூடாது. போக்சோ, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எப்.ஐ.ஆர். காவல்துறை இணையதளத்தில் தானாகவே லாக் ஆகிதான் இருக்கும்.
ஆனால் IPC-யில் இருந்து புதிய சட்டங்களான BNS-க்கு மாற்றப்பட்டதால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் சிலர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கும் எப்.ஐ.ஆர். நகல் கொடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் எப்.ஐ.ஆர். லீக் ஆகியிருக்கலாம். எப்.ஐ.ஆர் லீக் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
எப்.ஐ.ஆர்-ஐ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலை.யில் 70 சிசிடிவிக்கள் உள்ளன. 56 கேமராக்கள் வேலை செய்கின்றன. கைதான ஞானசேகரன் மீது திருட்டு உள்பட 20 வழக்குகள் உள்ளன. அவரால் வேறு யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வேறுஒருவரிடம் பேசியதாகக் கூறுவது தவறு. குற்றம் நடக்கும்போது ஞானசேகரனின் மொபைல் Airplane modeல் இருந்துள்ளது. குற்றவாளி யாரிடமும் போனில் 'சார்' எனப் பேசவில்லை. மிரட்டுவதற்காக அப்படி சொல்லியுள்ளார். காவல்துறை எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆய்வுக் கூட்டங்களில் முதல்-அமைச்சர் எங்களுக்கு கூறியது. எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை.
அண்ணா பல்கலை. வளாகத்தில் 140 பேர், 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன. இன்னும் அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.