சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பேராசிரியர்கள், 25 மாணவ, மாணவிகள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் பல்கலைக்கழக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.