மாணவி சடலம் வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்: காதல் டார்ச்சர் செய்தவரை கைது செய்ய கோரிக்கை

6 months ago 17

கலசபாக்கம், நவ.11: கலசபாக்கம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதல் டார்ச்சர் செய்தவரை கைது செய்யக்கோரி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி. அரசு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 8ம் தேதி தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கலசபாக்கம் போலீஸ் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், மாணவியின் தந்தை போலீசில் கொடுத்த புகாரில், எனது மகளை பொன்னாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் ஒருவர் பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார். எனது மகள் இறப்புக்கு அவர்தான் காரணம். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல், சம்பந்தப்பட்ட மாணவன் கலசபாக்கம் போலீசில் கொடுத்த புகாரில், நான் மாணவியின் வீட்டில் கடந்த 8ம் தேதி பேசிக்கொண்டிருந்தபோது அவரது உறவினர்கள் அடையாளம் தெரியாத 5 பேர் தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என கூறியிருந்தார். இருபுகார்களின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேற்று அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 9 நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மாணவி சடலம் வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்: காதல் டார்ச்சர் செய்தவரை கைது செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article