மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

1 month ago 10

சேலம்: சேலம் அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், பெற்றோர் மோதிக்கொண்டதில் லாரி டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள தும்பல்பட்டி இரட்டைப்புலிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (35). லாரி டிரைவர். இவரது மனைவி சத்யபிரியா. இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதில் இருமகன்கள் உள்ளனர். இதில் மூத்தமகன், நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில், கம்மாளபட்டி அருகேயுள்ள எட்டிகுட்டை கிராமத்தை சேர்ந்த முத்து (30) என்பவரது 5 வயது மகன் எல்கேஜி படித்து வந்தான்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு பள்ளியில் வைத்து, கனகராஜின் மகனான 7ம் வகுப்பு மாணவன், முத்து மகனான எல்கேஜி மாணவனிடம் தவறாக பேசி தகராறு செய்துள்ளார். இதை அறிந்த பள்ளி நிர்வாகம், அவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு, பெற்றோரை அழைத்து பேசியுள்ளனர். பின்னர், 7ம் வகுப்பு மாணவனுக்கு டிசி கொடுத்து, பள்ளியில் இருந்து நீக்கிவிட்டனர். பள்ளியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக முத்து, தனது தம்பி வினோத் (27) மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில், முத்து, அவரது தம்பி வினோத், உறவினர் குணா ஆகிய 3 பேரும் இரட்டைப்புலிபுதூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு 7ம் வகுப்பு மாணவனின் தந்தையான கனகராஜியிடம் சென்று, ஏன் உங்கள் பையன் சிறுவனிடம் தகராறு செய்தான் எனக்கேட்டுள்ளனர். அப்போது, கனகராஜின் மனைவி சத்யபிரியா மற்றும் உறவினர்களும் திரண்டனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாகியுள்ளது. அதில், முத்துவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதை பார்த்து ஆத்திரமடைந்த வினோத், தன்னிடம் இருந்த கத்தியால் கனகராஜை வயிற்றில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்துவிழவும், 3 பேரும் அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயமடைந்து கனகராஜ் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கொலையில் ஈடுபட்ட முத்து, வினோத், குணா ஆகிய 3 பேரையும் தேடியநிலையில், வினோத், குணாவை பிடித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கனகராஜூம், முத்துவும் ஏற்கனவே ஒரே லாரியில் டிரைவர், கிளீனராக பணியாற்றி வந்துள்ளனர். இதனால், அவர்களின் மகன்களை ஒரேபள்ளியில் சேர்த்துள்ளார்கள். அங்கு பள்ளியில் ஏற்பட்ட தகராறில், கனகராஜின் மகனுக்கு டிசி கொடுத்து நீக்கியுள்ளனர். இந்த தகராறை தட்டி கேட்பதற்காக முத்து, அவரது தம்பி வினோத் உள்ளிட்ட 3 பேர் சென்ற இடத்தில் வாக்குவாதம் முற்றி, அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். அதில், கனகராஜை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

The post மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article