மதுரை: கூல் லிப் விற்போர் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் புகையிலை பறிமுதல் வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, ‘‘தமிழ்நாட்டில் கூல் லிப் எனும் போதைப்பொருளை விற்பனை செய்த வழக்கில் ஜாமீன் கோரி பல மனுக்கள் தாக்கலாகின்றன. பள்ளி மாணவர்கள் இதற்கு அடிமையாகியுள்ளது தெரிய வருகிறது. இவற்றை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? இந்த வழக்கில், ஹரியானா மாநிலம் சோனேபேட், கர்நாடக மாநிலம் தும்கூர் மற்றும் அந்தரசனஹள்ளி ஆகிய இடங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்களை ஒரு எதிர்மனுதாரர்களாக சேர்த்து பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, ‘‘தமிழ்நாட்டில் கூல் லிப், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அண்டை மாநிலங்களில் இருந்து விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக இங்கு கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுக்கப்படுகிறது.
விற்பனை செய்தது தொடர்பாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பலர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தான் உரிய முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டை சுற்றியுள்ள மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் குட்கா பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும். சட்ட விரோதமாக தமிழ்நாட்டிற்குள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது’’ என்றனர்.
ஒன்றிய அரசு தரப்பில், ‘‘குட்கா பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாக பின்பற்றுவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டது. கூல் லிப் நிறுவனங்கள் தரப்பில், ‘‘கூல் லிப், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரிப்பிற்கு மற்ற மாநில அரசுகள் முறையாக அனுமதி வழங்கியுள்ளன. அனுமதி பெற்றே தயாரிக்கப்படுகிறது. இவற்றை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர் என கூறப்படுகிறது. இதை நாங்கள் தடுக்க முடியாது’’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘தற்போது கூல் லிப், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இளைஞர்களைத் தாண்டி பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளது. மாணவர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனை நடக்கிறது. இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. உடல்நல பாதிப்புடன் வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.
அரசு கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுப்பதைப் போல, கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே முற்றாக தடை செய்ய முடியும். எனவே, இந்த நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் விரிவான பதில்மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அக். 14க்கு தள்ளி வைத்தனர். கூல் லிப், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரிப்புக்கு மற்ற மாநில அரசுகள் முறையாக அனுமதி வழங்கியுள்ளன. அனுமதி பெற்றே தயாரிக்கப்படுகிறது. இதை நாங்கள் தடுக்க முடியாது என்று ஒன்றிய அரசு
தெரிவித்து உள்ளது.
The post மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதால் கூல் லிப் விற்பவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.