மாணவர் கீர்த்திவர்மாவுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கை மாற்று அறுவை சிகிச்சை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

8 hours ago 2

சென்னை :+2 தேர்வில் இரு கைகளும் இன்றி 471 மதிப்பெண் பெற்ற கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவன் கீர்த்திவர்மாவுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விரைவில் கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் சாதித்த இரு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி மாணவன் கீர்த்தி வர்மாவுக்கு, முதலமைச்சர் உத்தரவின்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” தமிழ்நாட்டில் உறுப்பு தனத்திற்கு பெரிய அளவில் வரவேற்பும் வழிகாட்டுதலும் உள்ளது. நேற்று வெளியான 12 ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற, இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மா, தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.மாணவரின் கோரிக்கையை அடுத்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் மாணவர் கீர்த்தி வர்மாவுக்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கைகளை தானமாக பெற்று விரைவில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். ஸ்டான்லி மருத்துவமனையில் மாணவனின் பெயர் சேர்க்கப்பட்டு, வரும் திங்கள் முதல் மருத்துவ பரிசோதனைகள் தொடங்கும். கைகள் தானமாக கிடைத்தால் அதனை 6 மணி நேரத்தில் பொருத்த வேண்டும்; எனவே மாணவரின் சிகிச்சைக்கு ஏதுவாக சென்னையிலேயே அவரது கல்லூரி படிப்பை மேற்கொள்ள அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும்.” என தெரிவித்துள்ளார்.

The post மாணவர் கீர்த்திவர்மாவுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கை மாற்று அறுவை சிகிச்சை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்! appeared first on Dinakaran.

Read Entire Article