![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/24/35580301-untitled-9.webp)
சென்னை,
சிவகங்கை அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கணினி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
மாணவர் உயிரிழந்த சம்பவத்தை பெற்றோர் உட்பட யாருக்கும் தெரியப்படுத்தாமல் நீண்ட நேரம் மூடி மறைக்கும் முயற்சியில் அரசுப்பள்ளி நிர்வாகம் ஈடுபட்டதாகவும், அது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே, அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் தொடங்கி அனைத்து விதமான கட்டடங்களும், உபகரணங்களும் பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இந்த துயரச் சம்பவம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இச்சம்பவத்தில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.