மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

3 weeks ago 5

திருத்தணி: சென்னையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன் இறப்புக்கு நீதி கேட்டு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், பொன்பாடி காலனியைச் சேர்ந்தவர் சுந்தர் (20). இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் திருத்தணிக்குச் செல்ல காத்திருந்தபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் மாணவர் சுந்தரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த சுந்தரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த மாணவனுக்கு நீதிகேட்டு தலித் மக்கள் முன்னணி தலைவர் திருத்தணி திருநாவுக்கரசு ஆலோசனைப்படி அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஆறு கஜேந்திரன் மற்றும் இறந்த மாணவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கிராமமக்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் இறப்பில் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாக கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் மதியரசன் பேச்சுவார்த்தத்தையில் ஈடுபட்டார். ஆனால் ஆர்ப்பாட்டத்தை கைவிடாததால் அவர்களை அப்புறப்படுத்தியபோது போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்பாட்டத்துக்கு முன்னதாக வருவாய் கோட்டாசியர் தீபாவை சந்தித்து கல்லூரி மாணவர் படுகொலைக்கு நீதிகேட்டு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

The post மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Read Entire Article