மாட்ரிட் மகளிர் இரட்டையர் டென்னிஸ் பரபரப்பான பைனலுக்கு வெரோனிகா, எலிசே தகுதி

1 week ago 5

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு, ரஷ்யாவின் வெரோனிகா குதர்மெடோவா, பெல்ஜியத்தின் எலிசே மெர்டென்ஸ் இணையும், ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா, ரோமானியாவின் ஸொரானா சிர்ஸ்டீ இணையும் முன்னேறியுள்ளன. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டி ஒன்றில், ரஷ்யாவின் குதர்மெடோவா, பெல்ஜியத்தின் மெர்டென்ஸ் இணையும், பெலாரசின் விக்டோரியா அஸரென்கா, அமெரிக்காவின் அஷ்லின் க்ருகர் இணையும் மோதின.

இப்போட்டியில் அபாரமாக ஆடிய, குதர்மெடோவா, மெர்டென்ஸ் இணை, 4-6, 6-4, 10-8 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரை இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா, ரோமானியாவின் ஸொரானா இணையும், லாத்வியா வீராங்கனை யெலனா ஒஸ்டபெங்கோ, தைவானின் ஹிஸி சு வெ இணையும் மோதின.

இப்போட்டியில் அபாரமாக ஆடிய அன்னா, ஸொரானா இணை, 7-6, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து, குதர்மெடோவா, மெர்டென்ஸ் இணையும், அன்னா, ஸொரானா இணையும் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் பெறும் இணைக்கு, ரூ.3.85 கோடியும், இரண்டாம் பிடிக்கும் இணைக்கு, ரூ. 2 கோடியும் பரிசுத் தொகையாக கிடைக்கும்.

The post மாட்ரிட் மகளிர் இரட்டையர் டென்னிஸ் பரபரப்பான பைனலுக்கு வெரோனிகா, எலிசே தகுதி appeared first on Dinakaran.

Read Entire Article