
மாட்ரிட்,
பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.79 கோடியாகும்.
இந்நிலையில், இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), இத்தாலியின் லூசியா ப்ரோனெட்டி உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் லூசியா ப்ரோனெட்டியும், 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் நவோமி ஒசாகாவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.
இதில் அபாரமாக செயல்பட்ட லூசியா ப்ரோனெட்டி 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஒசாகாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனையான ஒசாகா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.