கண்ணமங்கலம், ஜன. 12: கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் அடுத்த தேப்பனந்தல் மாட்டு சந்தையில் ₹2 கோடி வர்த்தகம் நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள தேப்பனந்தல் கிராமத்தில் கடந்த 71 ஆண்டுகளுக்கு மேலாக வாரந்தோறும் சனிக்கிழமை தேப்பனந்தல் (கேளுர்) கூட்ரோடு அருகில் உள்ள மைதானத்தில் மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகளுக்கு பின்பு அதாவது 1949ம் ஆண்டு முதல் தேப்பனந்தல் மாட்டு சந்தை நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தேப்பந்தல் மாட்டுச்சந்தை மிகவும் பிரசித்திபெற்ற சந்தையாக விளங்கி வருகிறது.
இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி, களர், நாட்டு மாடு, உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகின்றன. வேலூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா கேரளா உள்ளிட்ட வெளி மாநிலத்திலிருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகள் வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் இந்த தேப்பனந்தல் மாட்டு சந்தையை நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் வியாழக்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் விடியற்காலை முதலே மாட்டு விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கவும் விற்பனை செய்யவும் குவிய தொடங்கினார்கள். நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற இந்த சந்தையில் சுமார் ₹2 கோடிக்கு மேல் மாட்டு விற்பனை நடைபெற்றதால் மாட்டு விவசாயிகள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
The post மாட்டு சந்தையில் ₹2 கோடி வர்த்தகம் வியாபாரிகள் மகிழ்ச்சி கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் அடுத்த தேப்பனந்தல் appeared first on Dinakaran.