செங்கல்பட்டு: மாசிமக பெளர்ணமியை ஒட்டி மாமல்லபுரம் கடற்கரையில் 10,000க்கும் அதிகமான இருளர் பழங்குடியின மக்கள் குவிந்தனர். மாசிமகத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இருளர் பழங்குடி இன மக்கள் வந்து திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் மாமல்லபுரத்தில் இருளர்களின் பாரம்பரிய திருவிழாவான மாசிமக பெளர்ணமி இன்று காலை தொடங்கியது. இதற்காக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், இருளர் பழங்குடி இன மக்கள் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வந்தனர்.
மாசிமக பெளர்ணமி அன்று அவர்களுடைய குலதெய்வமான கன்னியம்மன் கடலில் எழுந்தருளுவதாக நம்புகின்றனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடில்கள் அமைத்து தங்கி வரும் மக்கள், இன்று அதிகாலை முதல் கன்னியம்மனை வழிபட்டு வருகின்றனர். கடற்கரை மணலால் சிறிய அளவில் கோயிலை உருவாக்கி மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவற்றால் அலங்கரித்து வழிபட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு மொட்டை போடுவது, சாமி ஆடுவது, திருமணம் நிச்சயிப்பது, திருமணம் நடத்துவது, குறி சொல்லுவது, குறி கேட்பது போன்ற அவர்களது பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மாசிமக பெளர்ணமி.. மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்துள்ள இருளர் பழங்குடியின மக்கள்: கடற்கரை மணலில் சாமி செய்து அலங்கரித்து வழிபாடு!! appeared first on Dinakaran.