சென்னை: மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து ரூ.1.4 கோடி செலவில் ஊட்டியில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.100 கோடி வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து ரூ.1.4 கோடி செலவில் ஊட்டியில் காந்தல் வட்டத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே ரிசார்ட் கட்ட தமிழக அரசு முடிவு செய்து அரசாணையும் வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.