
சென்னை,
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"மா" விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய், கடந்த 20.06.2025 அன்று கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடத்தி, "மா" விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரியது அதிமுக.ஆனால், வழக்கம் போல இங்குள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? இல்லை. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசு தானே இந்த அரசு? இவர்களிடம் விவசாயிகள் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்?
இந்நிலையில், கர்நாடக மாநில மா விவசாயிகளுக்கு PDPS திட்டத்தின்படி இழப்பீட்டினை மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நலன் காக்கும் நோக்கில் இந்தியப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்பதுடன், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை அறிவித்து வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் "மா" பயிர்களின் விலை வீழ்ச்சியால் சொல்லொண்ணா துயரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும். அஇஅதிமுக என்றும் விவசாயப் பெருங்குடி மக்களுடன் துணை நிற்கும். அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும்."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.