மீனம்பாக்கம்: மஸ்கட்டிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கிய கேரள தலைமறைவு குற்றவாளியை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்துக்கு பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்பட பல்வேறு ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது இதே விமானத்தில் மஸ்கட்டிலிருந்து வந்திறங்கிய கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த சஜீவன் அத்துல் (31) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை, கம்ப்யூட்டரில் வைத்து சென்னை விமான நிலைய விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அதில், அவர் கடந்த 6 மாதங்களாக கேரள போலீசாரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும், திருச்சூர் சிட்டி போலீசில் கடந்தாண்டு, டிசம்பர் மாதம் சஜீவன் அத்துல்மீது பணமோசடி, நம்பிக்கை துரோகம், கூட்டு சதி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவாகியிருப்பது குடியுரிமை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.
இவ்வழக்கு தொடர்பாக கேரள போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகி, வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாகவும் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதுதொடர்பாக, ஏற்கெனவே சஜீவன் அத்துலை தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என திருச்சூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அறிவித்துள்ளார். மேலும், சஜீவன் மீது அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டிருந்தது. எனவே, சஜீவன் அத்துலை வெளியே விடாமல், ஒரு அறையில் குடியுரிமை அதிகாரிகள் அடைத்து வைத்தனர்.
இதுபற்றி திருச்சூர் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்து, கேரள தலைமறைவு குற்றவாளி சஜீவன் அத்துல் அடைத்து வைத்துள்ள அறைக்கு போலீஸ் காவல் போடுவதற்கு ஏற்பாடுகள் செய்தனர். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ள தலைமறைவு குற்றவாளி சஜீவன் அத்துலை கைது செய்து கேரளாவுக்கு அழைத்து செல்ல, சென்னை விமான நிலையத்துக்கு திருச்சூர் மாவட்ட தனிப்படை போலீசார் வந்து கொண்டிருக்கின்றனர்.
The post மஸ்கட்டிலிருந்து சென்னை வந்த தலைமறைவு குற்றவாளி கைது: விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.