தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.மழையால் 33 சதவீதம் நெற்பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று, தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்தது. தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் உக்கடை பகுதியில் மழையால் மூழ்கி சேதமடைந்துள்ள நெற்பயிர்களை வியாழக்கிழமை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் மழையால் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை எடுத்து அமைச்சர்களிடம் காண்பித்து சேதமடைந்த பயிர்களை கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.