*தீயணைப்பு அலுவலர் தகவல்
ஊட்டி : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய வார விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கேரள, கர்நாடக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சுமார் 11.30 மணியளவில் ஊட்டி ஏரியில் ஒருவர் தத்தளித்த படியே காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறினார். இதனை பார்த்து படகு சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளும், கரையில் நின்று கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து படகு உதவியுடன் ஏரியில் தத்தளித்து கொண்டிருந்தவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்த மீட்பு பணிகளை அச்சத்துடன் சுற்றுலா பயணிகள் பார்த்து கொண்டிருந்தனர். மீட்டு கரைக்கு கொண்டு வந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் நலமான உள்ளாரா? என தீயணைப்பு வீரர்களிடம் சுற்றுலா பயணிகள் கேட்டனர். அப்போது, நீலகிரியில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பாக ஊட்டி படகு இல்லத்தில் ஒத்திகை மேற்கொண்டதாக தீயணைப்பு துறையினர் விளக்கமளித்தனர். தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக மேற்கொண்ட இந்த மீட்பு பணி ஒத்திகை தான் என்பது தெரிந்த பின்னர் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் நிம்மதியடைந்தனர். தொடர்ந்து பேரிடர் ஏற்பட்டால் மீட்பு குழுக்கள் வருவதற்குள் பேரிடரில் சிக்கியவர்களை பொதுமக்கள் எவ்வாறு மீட்க வேண்டும். முதலுதவி அளிப்பது குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:அக்டோபர் 13ம் தேதி சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகையை ஊட்டி படகு இல்லத்தில் செய்து காண்பித்தோம். மழை பாதிப்புகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை இம்மாதம் 3வது வாரத்தில் இருந்து துவங்கவுள்ளது.
மழையின் போது பேரிடர் பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு பணிகள் மேற்கொள்ள வசதியாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயந்திர வாள், கயிறு உள்ளிட்ட அனைத்து வகையான உபகரணங்கள், தளவாடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பேரிடர் மீட்பு பணிகள் மேற்கொள்ள வசதியாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ள ரப்பர் படகுகள், எமர்ஜென்சி லைட், ஜெனரேட்டர், பெட்ரோல் மூலம் இயங்கும் 20க்கும் மேற்பட்ட மரம் அறுக்கும் எந்திரங்கள், உயிர் பாதுகாப்பு கவசங்கள், கயிறு போன்றவை உள்ளது. தீயணைப்பு வாகனங்கள், பெரிய தண்ணீர் லாரிகள் உள்ளன.
மழை சமயங்களில் பேரிடர்கள் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். மாவட்ட நிர்வாகம் தரும் தகவல்களை மட்டும் பொதுமக்கள் நம்ப வேண்டும்.
பேரிடர் பாதிப்புகள் மற்றும் உதவிக்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தீயணைப்புத்துறையை தொடர்பு கொள்ள 101, 112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது ஊட்டி படகு இல்ல மேலாளர் உதயகுமார், ஊட்டி தாசில்தார் சரவணகுமார், நிலைய அலுவலர் (போக்குவரத்து) தர், முன்னணி தீயணைப்போர் சாமுவேல் பெஞ்சமின் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஒத்திகை வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் appeared first on Dinakaran.