சென்னை: சென்னையில் மழை ஓய்ந்ததால் கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த கனமழை பெய்தது. நேற்று அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கி குவித்தனர்.
இதனால் பல்பொருள் அங்காடிகள், காய்கறி சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. இன்றைய தினம் காய்கறி விலை தற்போது கணிசமாக குறைந்து உள்ளது. கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் காய்கறிகள் விலை குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நேற்று ரூ.150க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் கிலோ ரூ.60க்கும், உருளைக்கிழங்கு ரூ.45க்கும், சின்ன வெங்காயம் ரூ.80க்கும், ஊட்டி கேரட் ரூ.50க்கும், கர்நாடக கேரட் ரூ.30க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160க்கும், கர்நாடக பீட்ரூட் ரூ.30க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.65க்கும், வெண்டைக்காய் ரூ.40க்கும், கத்திரிக்காய் ரூ.30க்கும், பாகற்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முருங்கைக்காய் கிலோ ரூ.60க்கும், பட்டாணி ரூ.250க்கும், இஞ்சி ரூ.170க்கும், பூண்டு ரூ.350க்கும், அவரைக்காய் ரூ.80க்கும், தேங்காய் ரூ.50க்கும் விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post மழை நின்றதால் கணிசமாக குறைந்த காய்கறி விலை: கோயம்பேடு சந்தையில் நேற்று ரூ.150க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.80க்கு விற்பனை!! appeared first on Dinakaran.