பெண்களுக்கு மிகவும் பிடித்த மலர் குண்டுமல்லி. வாசத்திலும், தலையில் வைத்தால் பாந்தமான தோற்றத்தைத் தருவதிலும் குண்டுமல்லிக்கு நிகர் குண்டுமல்லியேதான். இத்தகைய குண்டுமல்லிக்கு எப்போதும் ஒரு நிலையான விலை இருப்பதால் விவசாயிகள் இதை விரும்பிப் பயிரிடுகிறார்கள். குண்டுமல்லியை முறையாக பயிரிட்டு நல்ல வருமானம் பெற எக்ஸ்ட்ரா டிப்ஸ்…
மண்வளம்: குண்டுமல்லி சாகுபடி செய்ய நல்ல வடிகால் வசதியுடைய வளமான இருமண்பாடு கொண்ட செம்மண் நிலங்கள் மிகவும் ஏற்றவை. வடிகால் வசதி இல்லாத களர் மற்றும் உவர் நிலங்கள் சாகுபடி செய்ய உகந்தவை அல்ல. இதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருக்க வேண்டும்.
தோதான சீசன்: ஜூன் – நவம்பர் மாதங்கள் குண்டுமல்லி சாகுபடி மிகவும் ஏற்ற மாதங்கள். குண்டுமல்லி செடிகள் பொதுவாக அதிக மழையைத் தாங்கி வளரும் ஒரு வெப்ப மண்டலப் பயிர் என்பதால் இந்த சீசனில் சாகுபடியைத் துவக்கலாம்.
நாற்றுகள்: வேர் விட்ட குச்சிகள் அல்லது நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்தலாம். ஒரு எக்டர் நிலத்தில் நடவு செய்ய 6400 பதியன்கள் தேவைப்படும்.
நிலம் தயாரிப்பு: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். உழவுக்குப் பிறகு 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை 1.25 மீட்டர் இடைவெளியில் எடுத்து, ஒவ்வொரு குழியிலும் 20 கிலோ அளவுக்கு நன்கு மக்கிய தொழு உரம் இட்டு குழிகளின் மத்தியில் பதியன்களை நடவு செய்ய வேண்டும். அதன்பிறகு நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
நீர் நிர்வாகம்: செடிகள் வேர்ப்பிடித்து நன்கு வளரும் வரை வாரத்திற்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சி வர வேண்டும். பிறகு காலநிலைக்கு ஏற்ப நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:
மல்லிகைச் செடிக்கு 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அதாவது செடிகளைக் கவாத்து செய்தவுடன் ஒரு முறையும், ஜூன் – ஜூலை மாதத்தில் மறுமுறையும் செடியினைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச்செய்ய வேண்டும்.
கவாத்து முக்கியம்
மல்லிகைச் செடிகளை கவாத்து செய்வது மிகவும் அவசியம். கவாத்து செய்தால்தான் செடிகள் நன்கு வளர்ந்து பலன் தரும். எனவே செடிகளைத் தரையில் இருந்து 50 செ.மீ உயரத்தில் நவம்பர் இறுதி வாரத்தில் மல்லிகைச் செடிகளைக் கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்யும்போது நோயுற்ற உலர்ந்த குச்சிகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி விட்டு சூரிய ஒளி நன்கு படுமாறு செய்யவேண்டும்.
புழு மற்றும் பூச்சிக்கட்டுப்பாடு
குண்டுமல்லிச் செடிகளை மொட்டுப்புழு, சிலந்திப்பூச்சி, நூற்புழு ஆகியவை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். இதில் மொட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த இளம் மொட்டுக்களைத் தாக்கி பெருத்த சேதங்களை ஏற்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். சிலந்திப் பூச்சிகள் குண்டுமல்லிச் செடிகளின் இலைகளைக் கடித்து சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 0.2 சதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நூற்புழுக்களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தால் நிலத்தின் மண் மாதிரியை எடுத்து கண்காணிக்கவேண்டும். நூற்புழுக்களால் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளிறிய இளம் மஞ்சளாகி பின்னர் கருகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த 10 கிராம் டெமிக் குருணை மருந்தினை வேர்ப்பாகத்தின் அருகில் இட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
இலைகள் மஞ்சளாதல்
இரும்புச்சத்து குறைபாடு, வேர் அழுகல் மற்றும் வேர்ப்புழு தாக்குதலால் குண்டுமல்லிச் செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். இரும்புச்சத்து குறைபாட்டினால் இலைகள் மஞ்சளாவதைத் தடுக்க லிட்டருக்கு 5 கிராம் பெர்ரஸ் சல்பேட் கரைசலை 3 மாதங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். வேர் அழுகலுக்கு காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25 சதவீதம் கரைசலை செடியினைச் சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில் குண்டு மல்லியை பயிர் செய்வதன் மூலம் இந்நோய் வராமல் கட்டுப்படுத்தலாம். வேர்ப்புழு தாக்குதலுக்கு 5 கிராம் ப்யூரடான் குருணைகளை செடியைச் சுற்றி இட்டு மண்ணுடன் கலந்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
அறுவடை
மல்லிகைச்செடிகள் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் பூ பூக்க ஆரம்பிக்கும். செடிகள் நட்ட முதல் ஆண்டிலேயே பூக்க ஆரம்பித்துவிடும். இரண்டாம் ஆண்டில் இருந்துதான் சீரான விளைச்சல் இருக்கும். செடிகளில் நன்கு வளர்ந்த மொட்டுகளை அதிகாலை நேரத்தில் பறித்துவிட வேண்டும். அப்போதுதான் உரிய நேரத்தில் அறுவடையை முடித்து விற்பனைக்கு அனுப்ப வசதியாக இருக்கும். ஒரு எக்டர் நிலத்தில் 8750 கிலோ பூ மொக்குகள் அறுவடையாக கிடைக்கும். இதை அவ்வப்போதைய விலை நிலவரத்தைப் பொருத்து விற்பனை செய்து லாபம் பார்க்கலாம்.
The post மல்லி மல்லி… குண்டு மல்லி! appeared first on Dinakaran.