மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி புதுச்சேரி முதியவர் மீது வழக்கு

4 months ago 10

சேத்தியாத்தோப்பு, பிப். 5: மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே கரைமேடு பகுதியை சேர்ந்த முத்தழகன், வேல்முருகன், பிரபு உள்ளிட்ட 4 பேரிடமும் 6 மாதங்களுக்கு முன் புதுச்சேரியை சேர்ந்த சந்திரகுமார்(62) என்பவர் மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் தலா ₹75 ஆயிரம் வீதம் பெற்றுக்கொண்டு, பல மாதங்களாக இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வெளிநாடு செல்லும் ஆசையில் அவர்கள் வட்டிக்கு பணம் பெற்று கொடுத்துள்ளனர். பின்னர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே முத்தழகன் உள்ளிட்ட 4 பேரும் சந்திரகுமாரிடம் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு வெளிநாடு அனுப்புவது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு சந்திரகுமார் அடுத்த மாதம் என இழுத்தடிப்பு செய்து வந்ததோடு, ஒரு கட்டத்தில் செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திரகுமாரை தேடி வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் சிதம்பரம் வட்டம் ஓடாக்கநல்லூர் பகுதியில் டிராவல்ஸ் அலுவலகம் திறந்து சந்திரகுமார், மேலும் பலரிடம் வெளிநாடு அனுப்புவதாக பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், ஒரத்தூர் போலீசார் ஓடாக்கநல்லூர் பகுதிக்கு சென்று சந்திரகுமாரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து, அவரிடமிருந்து செல்போன், இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் சந்திரகுமார் பணத்தை திருப்பி தருவதாக கூறி சென்றவர் தலைமறைவானார். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் சைபர் குற்றப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளனர். இதேபோன்று வடப்பாக்கம், வட்டத்தூர் பகுதிகளை சேர்ந்த பலரிடமும் வெளிநாடு அனுப்புவதாக கூறி சந்திரகுமார் பண மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்ட சந்திரகுமாரை பிடித்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி புதுச்சேரி முதியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article