மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்தபோது நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு: மகளை பார்த்துவிட்டு திரும்பியபோது சோகம்

3 months ago 18

சென்னை: மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தபோது நடுவானில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். மகளை பார்த்துவிட்டு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கலையரசி (58). இவருடைய மகள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். கலையரசி 2 மாதங்களுக்கு முன்பு மகளை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார். இந்தநிலையில் கலையரசி ஆஸ்திரேலியாவிலிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கோலாலம்பூர் வந்து, அங்கிருந்து மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தார். அந்த விமானம், இரவு 11.10 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கினர். ஆனால் கலையரசி மட்டும், விமானத்தின் இருக்கையில் தலையை சாய்த்து தூங்குவது போல் இருந்தார். விமான பணிப்பெண்கள் கலையரசியை எழுப்பினர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பணிப்பெண்கள் விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் அவசரமாக விமானத்துக்குள் ஏறி, கலையரசியை பரிசோதித்தனர்.

அப்போது, விமானம் நடுவானில் பறந்தபோதே கலையரசி, உயிரிழந்தது தெரிய வந்தது. கடுமையான மாரடைப்பு காரணமாக தூக்கத்திலேயே கலையரசி உயிர் பிரிந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, கலையரசியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வழக்கமாக இரவு 11 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் நள்ளிரவு 12 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும். ஆனால் பயணி விமானத்துக்குள் உயிரிழந்து விட்டதால், விமானம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு, 1 மணி நேரம் தாமதமாக நேற்று அதிகாலை 1 மணிக்கு சென்னையில் இருந்து, கோலாலம்பூருக்கு 267 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.

 

The post மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்தபோது நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு: மகளை பார்த்துவிட்டு திரும்பியபோது சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article